Thanthai Periyar EV Ramasamy

Thanthai Periyar EV Ramasamy
1879-1973

Thursday 13 May 2010

பகுத்தறிவாளர் கழகத்தில் பார்ப்பானைச் சேர்க்காதீர் என்று கூறுவது ஏன்?

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை வருமாறு:-

வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதோடு வெற்றி பெற ஓட்டளித்த வாக்காளர்
பெருமக்களையும் பாராட்ட வேண்டும். இத்தேர்தலில் பார்ப்பனர்களின் பெரும்
எதிர்ப்புக்கிடையே அவற்றை எல்லாம் இலட்சியம் செய்யாமல் ஓட்டளித்து
வெற்றிபெறச் செய்தது பாராட்டிற்குரியதாகும். இத்தேர்தலில் மட்டுமல்ல;
எல்லா தேர்தல்களிலுமே பார்ப்பனர்கள் நமக்கு எதிராகவே பாடுபட்டு
வந்திருக்கின்றனர். இந்த நாட்டில் பறையனாக, சூத்திரனாக இருப்பதைவிட
துலுக்கன் நாட்டில் வாழ்வதில் பெருமைப்படுகின்றேன். கிறிஸ்தவன் நாட்டில்
வாழ்வதில் பெருமைப்படுகிறேன்.

சுதந்திரநாடு என்றால் அங்கு பார்ப்பான், பறையன், சூத்திரன், மற்ற எந்த
ஜாதியுமே இருக்கக் கூடாது. மனிதன் தான் இருக்க வேண்டும். எப்படிக்
கடவுளும், மதமும், கோயிலும் நம்மை மடையர்களாக்கி இழிமக்களாக்கி
வைத்திருக்கிறதோ, அது போன்று தான் சுயராஜ்யம், சுதந்திரம், ஜனநாயகம்
என்பது நம்மை இழிவுபடுத்தி வைத்திருக்கிறது. இதனை நான் சாதாரணமாகச்
சொல்லவில்லை, 50 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டே சொல்கிறேன். உங்களிடம்
மட்டும் சொல்லவில்லை. காந்தி, நேரு ஆகியவர்களிடமே சொல்லி இருக்கின்றேன்.
அவர்கள் உணர ஆரம்பித்தது மிக மிகப் பின்னாலேயே ஆகும்.

கடவுள், மதம், ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு, பிதிர்லோகம் என்பவை
யாவும் மனிதனை மடையன் ஆக்குவதற்காகப் பார்ப்பானால் கற்பிக்கப்பட்டவையே
ஆகும். கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள் 50 கோடிக்கு
மேலிருக்கிறார்கள், அவர்கள் கடவுளுக்கு உருவமில்லை. அதேபோல் 100 கோடி
கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுக்கும் உருவமில்லை; அவர்கள்
கடவுளை வணங்குவது நம்மைப்போல் காட்டுமிராண்டித்தனமாக அல்ல. மனத்தால்
நினைப்பதோடு சரி. நம்மைப் போல் பூசைபடையல்கள் செய்வது கிடையாது.

இந்த உலகில் சுமார் 20 கோடி மக்களாகிய இந்துக்கள் என்று சொல்லப்படுகிற
நம் மக்கள் தான் கடவுளுக்கு உருவம் செய்து அதற்கு 6 கால பூசை, திருமணம்,
திருவிழா என்று சொல்லி விழாக்கள் கொண்டாடி மக்களை மடையர்களாக்கிக்
கொண்டிருக்கிறார்கள்.

நமது கடவுள்கள், புராணங்கள், அவதாரங்கள் என்பவை யாவும் நம் மக்களைக்
கொல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையே ஆகும். நம் கடவுள் கதைகளும்,
பெருமைகளும் எத்தனை கோடி பேரைக் கொன்றது என்பதில் தானிருக்கிறது. கொன்றதை
விழாவாகக் கொண்டாடுகிறார்கள், கதா காலட்சேபம் செய்கிறார்கள். கடவுள்
அவதாரங்கள், அழித்தது எல்லாம் நம் மக்களையே என்பதற்குப் பலஆதாரங்கள்
இருக்கின்றன. பல அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளனர். நேருவே தன்
மகளுக்கு எழுதிய கடிதத்தில் இராமாயணம் என்பது தேவர்களுக்கும்,
அசுரர்களுக்கும் நடைபெற்ற போராட்டமே ஆகும் என எழுதி இருக்கிறார்.

கடவுள், மதம், ஜாதி, புராணம், ஆகிய இக்கற்பனைகள் அனைத்தும் பார்ப்பான்
மேல் ஜாதியாக இருப்பதற்கும், நாம் கீழ் ஜாதியாக இருப்பதற்கும்
கற்பிக்கப்பட்டவையே ஆகும். இதை எல்லாம் நாங்கள் ஒழிக்க வேண்டும் என்பது
திமிரினால் அல்ல. இவை தான் நம்மை இழி மக்களாக, சூத்திரர்களாக ஆக்கி
வைத்திருக்கின்றன. அதனால் தான் நம் இழிவைப் போக்க இவற்றை ஒழிக்க வேண்டும்
என்கின்றோம்.

இந்த நாட்டில் நாங்கள் ஒருவர் தான் பார்ப்பானைப் பார்ப்பான்
என்றழைக்கின்றோம். மற்றவன் பார்ப்பானைப் பிராமணன் என்று தான்
கூப்பிடுகின்றான்? ஒருவனைப் பிராமணன் என்றால் மற்றவன் யார்? சூத்திரன்
தானே! ஒரு பெண் இன்னொருத்தியைப் பார்த்து பதிவிரதை என்று சொன்னால் அவள்
யார்? பதிவிரதைத் தன்மையற்ற விபசாரி என்று தானே பொருள்.

நம் மந்திரிகள் கூட பார்ப்பானைப் பார்ப்பான் என்று சொல்லத்
தயங்குகின்றார்கள். மடாதிபதிகள் முதல் பார்ப்பான் என்று சொல்ல
தயங்குகிறார்கள்.

கடவுளை ஒழித்த கோயில்களை, இடித்த பார்ப்பனர்களை (கடவுள் பிரசாரகர்களை,
மதப் பிரசாரகர்களை) எல்லாம் வெட்டி வீழ்த்திய நாடுகள் பல இருக்கின்றன.
அந்நாடுகளில் எல்லா மனிதர்களும் சம அந்தஸ்துள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பணக்காரன் ஏழை என்கின்ற பேதமில்லை.

முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதமில்லை. அந்த நாட்டில் போலீஸ்
அய்.ஜி.க்குள்ள மதிப்பு சாதாரண கான்ஸ்டேபிளுக்கும் உண்டு. கலக்டெரும்,
பியூனும் ஒரே மதிப்புடையவர்கள் என்கின்ற மதிப்போடு வாழ்கின்றார்கள்.
எந்தப் பேதமும் அவர்களுக்கிடையில் இல்லை. இவ்வளவுக்கும் காரணம் அந்த
நாட்டில் கடவுள் இல்லாததாலேயே ஆகும்.

நம் நாட்டில் பேதங்களிருப்பதற்குக் காரணம் கடவுளேயாகும். இந்தப் பேதங்கள்
ஒழிய இன்று கடவுளைச் செருப்பால் அடிக்கின்றோம். இவற்றில் மாறவில்லை
என்றால் நாளைக்கு மனிதர்களையே கொல்ல நேரலாம். சமுதாய மாற்றம் என்றால்
கொலை, கொள்ளை, தீவைப்பு, நாசம் யாவும் நடந்து தான் தீரும்.

இன்று நாம் எல்லாம் சூத்திரர்களாக பறையன், சக்கிலிகளாக இருப்பதற்குக்
காரணம் கொலை. சித்திரவதை, கழுவேற்றல் முதலிய காரியங்களைச் செய்து தான்
ஆகும். இதிலிருந்து மாற நாமும் இக்காரியங்களைக் கையாள வேண்டியது தான்.
அறிவான காலமாக இருப்பதால் அடிப்படையிலிருந்து ஆரம்பித்து இருக்கிறோம்.
அதாவது கடவுளைச் செருப்பால் அடிப்பதிலிருந்து துவக்குகின்றோம். இது
வளர்ந்து நாளை அவர்கள் செய்த காரியத்தை நாமும் செய்யும் படி நேரலாம்.

இன்றைக்கு இருப்பதை விட மோசமான நிலை 2500 ஆண்டுகளுக்கு மேலிருந்து
அப்போது ஒரே ஒரு மனிதன் சித்தார்த்தன் என்பவன் தோன்றி, தற்போது நாம்
செய்வது போன்று அறிவுப் பிரசாரம் செய்த மக்கள் யாவரையும் மாற்றிவிட்டான்.
வேதங்களை எல்லாம் நெருப்பில் இட்டுக் கொளுத்தினான். அவன் கொள்கை நாடு
முழுவதும் பரவி மக்கள் எல்லாம் அவன் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.
பார்ப்பனர்களை எல்லாம் கொலை செய்ய ஆரம்பித்தனர்.

இதைக் கண்டு பார்ப்பான் புத்த கொள்கையை ஏற்றவன் போல் நடித்து, அதில்
சேர்ந்து பிரசாரகனாகி புத்த மடங்களை எல்லாம் கொளுத்தினார்கள். பவுத்த
கொள்கைகளை ஏற்றவர்களை எல்லாம் நாசம் செய்து அக்கொள்கைகளைத் தடுத்து
விட்டனர். அதனால் தான் இன்றைக்குப் பார்ப்பானை பகுத்தறிவாளர் கழகத்தில்
சேர்க்கக் கூடாது என்று சொல்கிறேன். அவனைச் சேர்த்தால் புத்த இயக்கத்தில்
சேர்ந்து புத்த கொள்கையைப் பரவவிடாமல் தடுத்தது போல் தடுத்து விடுவான்.
எனவே நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பார்ப்பானை நுழையவிடவே கூடாது.

பார்ப்பான் எந்த விதமான பாதகமும், அக்கிரமும் செய்வான். அதற்கு அவன்
சாஸ்திரத்தில் அவனுக்கு இடமிருக்கிறது. பார்ப்பான் தன் தருமத்தைக்
காப்பாற்றிக் கொள்ள எந்த விதமான அக்கிரமும் செய்யலாம், அது பாவமல்ல
என்பது சாஸ்திரமாகும். எனவே பார்ப்பான் நம்மை ஒழிக்க எந்தப் பலாத்காரமான
காரியத்திலும் ஈடுபடலாம். அதற்கு எல்லாம் நாம் தயாராகத்தான் இருக்க
வேண்டும். நம்மில் சிலர் உயிர் விட நேரலாம். அதைப்பற்றி எல்லாம்
கவலைப்படாமல் போராட வேண்டியதுதான்.

இப்போதைய காலம் மிகவும் பகுத்தறிவுக் காலம். உலகம் வேகமாக முன்னேறிக்
கொண்டு போகிறது. உலகில் நாம் ஒருவர் தான் இன்னமும் முட்டாள் தனமாக,
மூடநம்பிக்கைக்காரர்களாக இருக்கின்றோம். இதிலிருந்து நாம் விடுதலை பெற்று
மற்ற உலக மக்களைப் போன்று இழிவற்று, அறிவு பெற்று வாழ வேண்டும். இனி
நீங்கள் எந்தக் காரியத்தையும் நடுநிலையிலிருந்து சிந்திக்க வேண்டும்.

--------------------- 12.5.1971 அன்று அரூரில் ஈ.வெ.ரா. பெரியார்
அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு- `விடுதலை’, 22.5.1971

No comments:

Post a Comment