Thanthai Periyar EV Ramasamy

Thanthai Periyar EV Ramasamy
1879-1973

Sunday 26 September 2010

பெரியாரின் தொலைநோக்கு
பெரியார் சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; சுதந்திர சிந்தனையாளர். அவர் தொடாத துறைகளே இல்லை. முழுக்க முழுக்க மானுடத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த தலைவர் ஒருவர் உலகில் உண்டென்றால், அவர் பெரியார் ஒருவர் தான். மானுடம் மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ தனது வாழ்நாளை செலவழித்தவர் அவர்.இயந்திரங்களின் யுகம் தொடங்கிய 20 ஆம் நூற்றாண்டில் அவர் பொது வாழ்வுக்கு வந்தவர்.முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், தொழிற்புரட்சி ஆகியவற்றைக் கண்டும்,கேட்டும்,அனுபவித்தும் வந்த காலத்தில் - பழம் பெருமை பேசிய இந்த நாட்டில் பகுத்தறிவைப் பேசியவர்; பரப்பியவர். உலகம் கண்ட மாற்றங்களை தனது இதழ்களில் வெளியிட்டவர்.
அவர் இங்கிலீஷ் படித்தவர் இல்லை.ஆனாலும் இங்கிலீஷ் படியுங்கள் என்றார். அது அந்தக்கால கட்டத்தின் அறிவு மொழி என்பதை உணர்ந்திருந்தார். மனித வாழ்வுக்கான வசதிகளை அளித்த இயந்திரங்கள் அப்போதுதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு வரத்தொடங்கின. மனித அறிவின் கொடை வழங்கிய அந்தப் பொறிகளைப் பற்றி மக்களிடம் தனது பிரச்சாரத்தின் போது எடுத்துப் பேசுவார். உடல் உழைப்பைக் குறைத்து முன்னிலும் அதிகமான வாழ்க்கை வசதிகளை வழங்கும் வகையில் இயந்திரங்கள் உருவானால் அதனை வரவேற்பதுதான் சரி என்பது அவரது கருத்து. இந்த அடிப்படையில் தான் அவர் 1944 ஆம் ஆண்டு எழுதிய ஒரு நூல் "இனி வரும் உலகம். எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே இந்த நூலின் சாரம்.
சமூகம், வாழ்க்கை, ஒழுக்கம், மனிதப்பண்பு, கல்வி, இயந்திரங்கள், அறிவியல், தொழில்நுட்பம், உலக நிலை,அரசியல் இப்படி பல்வேறு பொருள் குறித்தும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை இந்நூல் நமக்குத் தருகிறது. அவர் சொல்லிய சில மாற்றங்கள் இப்போது வந்துவிட்டன; சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் சில இங்கே ....
பெரியாரின் கருத்து:
சரீரத்தால் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும்... கக்கூஸ் எடுக்க வேண்டியதும், துலக்க வேண்டியதும், வீதி கூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடித்துவிடும்.
மனிதனுக்கு பாரம் எடுக்க வேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது.

பெரியாரின் கருத்து:
போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமு மாகவே இருக்கும்
இன்று பயன்பாட்டில்:
தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளில் விமான நிலையங்கள் வந்துவிட்டன.

பெரியாரின் கருத்து:
கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்
இன்று பயன்பாட்டில்:
செல்பேசிகள் (Cellphones) இல்லாதவர்களே இன்று இல்லை என்றநிலை வந்துவிட்டது.

பெரியாரின் கருத்து:
உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்
இன்று பயன்பாட்டில்:
3 ஜி (3G Cellphones) எனப்படும் முகம் காட்டிப் பேசும் செல்பேசி வசதி வந்துவிட்டது.

பெரியாரின் கருத்து:
ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்
இன்று பயன்பாட்டில்:
எஃப்.எம். ரேடியோ (FM Radio) என்னும் பண்பலை வானொலிக் கருவி மற்றும் ஐ பாட் (i pod), எம்.பி.3 பிளேயர் கருவிகள்
(mp 3,mp4,mp5 players) பயன்பாட்டில் உள்ளன.

பெரியாரின் கருத்து:
விஞ்ஞான சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்
இன்று பயன்பாட்டில்:
வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மற்றும் இ லேர்னிங் (E Learning) என்னும் காணொலித் தொடர்பு மூலம் கல்வி,வணிகம்,நிர்வாக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

பெரியாரின் கருத்து:
பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சந்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்
இன்று பயன்பாட்டில்:
முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் 1978 ஜூலை 25 இல் பிறந்தார்.அவருக்கு இப்போது வயது32.
சோதனைக் குழாய் மூலம் குழந்தை உருவாக்கம் (Test Tube Baby) இன்று எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது.

பெரியாரின் கருத்து:
ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்
இன்று பயன்பாட்டில்:
மின்சாரத்தால் இயங்கும் மகிழுந்துகள் (Electric Car), இந்தியாவில் ரேவா கார் (Reva Electric Car) வந்துவிட்டன. நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்னும் புதிய தொழில் நுட்பத்தால் சிறிய அளவில் பொருள்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.
உதாரணம் : டாடா நேனோ கார் (Tata Nano Car), கையடக்க மடிக்கணினிகள் (Laptop and Leaptop Computers)

No comments:

Post a Comment